Wednesday, 4 January 2012


சுற்றுசூழல் – (பீ. எம். கமால்)
(அதிராம் பட்டினம் கவியரங்கக் கவிதை )

ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
அகிலத்தின் சுற்றுசூழல்
அம்மணமாய்க் கிடந்தது !
அறங்கள் என்னும்
மரங்களை இழந்து
அரபகத்து பாலைவனம்
அநாதையாய்க்  கிடந்தது !
சூட்டின் கேட்டில்
சுருண்டுபோய்க் கிடந்தது
பாலை மட்டுமா ?
பாவி மனிதனின்
பண்பாடும்  கூட !
சீழ்நாறிக் கொண்டிருந்த
சிலை களிலெல்லாம்
பாவத் தூசுகள்
பரவிக் கிடந்ததால்
ஏகத்துவ வைரத்தை
உப்புகற்கள் உரசிப் பார்த்தன !
மனிதர்களுக்கு
பல தெய்வங்கள்
குலதெய்வங்கள் ஆனதால்
காற்றும்  கூடக்
கற்பழிந்திருந்தது !
சுற்றுசூழல்
மாறுபட்டிருந்ததால்
ஆன்ம வெளி யங்கே
அழுக்காகிக் கிடந்தது !
சுற்றுச் சூழலைக்
கற்றுக்கொள்ளவும்
கடவுளை மனதில்
பெற்றுக் கொள்ளவும்
கல்வி அப்போது
காணாமல் போயிருந்தது
அந்நேரத்தில்
பொன்னொளி ஒன்று
புறப்பட்டு வந்தது !
அறங்கள் என்னும்
மரங்களை நட்டு
மகிமைப் படுத்த
மன்னர் நபிகள்
மண்ணில் உதித்தார்
வள்ளல் நபியின்
வாய்மொழி அமுத
வார்த்தை மரங்கள்

நடப்பட்டதால் தானே
மனிதனின் மனச்
சுற்றுச் சூழல்
சுகாதாரம் பெற்றது !
அது-
வெறும்.
மரங்கள் மட்டுமல்ல-
மண்ணுக்கு கிடைத்த
மகத்தான வரங்கள் !
தென்னை மரங்களுக்கு
அன்னை மரமான
பேரீச்சை மரங்களும்
பேசிய காலமது !
‘ஆல’ மரங்களும்
‘அரச” மரங்களும்
பேரீச்சை மரத்திடம்
பிச்சை கேட்டன !
பெருமானாரின்
தண்ணொளி பட்டுத்
தழைத்தன அறங்கள் !
வள்ளல்   நபியின்
வருகையதனால்
பாலை மட்டுமா
பரிசுத்தம் ஆனது ?
அகிலமே அன்று
அசுத்தம் நீங்கியது !
விண்ணில் விழுந்த
ஒசான் ஓட்டையை
ஒக்கிட வந்த
ஒப்பற்ற நபிகள்
அதனால் தானோ
ஒரு விரல் நீட்டி
ஒண் மதியைப் பிளந்தார்கள் ?
சுற்றுச் சூழல் தினம்
ஜூன் ஐந்து தேதி அல்ல !
உத்தம நபிகள்
உதித்த நன்னாளே
சுத்தம் பிறந்த நாள்
சுற்றமும் மகிழ்ந்த நாள் !
சுத்தம் எனபது
ஈமானில் பாதியென்று
எந்த மதமும்
எடுத்துச் சொன்னதில்லை !
சுற்றுச் சூழலைச்
சுத்தம் செய்வதற்கு
சொன்னது நபிகள்
நாயகம் மட்டுமே
மார்க்க  மா மேதைகளே

இதோ நமது
மார்க்கச் சுற்றுசூழல்
மாசாகிக்  கொண்டிருக்கிறது !
பாலி தீன்களால் மட்டுமல்ல -
போலிதீன் களாலும்
பொலிவிழந்து கிடக்கிறது !
பெருமானாரைப்
பின்பற்றி நடந்த
அருமைததோழரை
ஆருயிர் நேசரை
சிறுமைப்படுத்தும்
கிரிமினல் சிலரால்
சத்திய வழியின்
சுற்றுச்சூழலில்
குப்பைகள் இங்கே
கொட்டப்படுகிறது !
தீன் நெறியில்
வீண் நெறியைத்
திணிக்கின்ற பேர்களை
சுத்தபடுத்துதற்கு
சோதரரே ! தயவுசெய்து
கையில் துடைப்பக்
கட்டையுடன் வாருங்கள் !
இஸ்லாத்தின் சோலைகளில்
இடுகின்ற குப்பைகளை
எடுத்து எறிவதற்கு
எல்லோரும் வாருங்கள் !

 
ஆட்டைக்காணவில்லை !
(பீ. எம். கமால், கடையநல்லூர்)

காணவில்லை !
இருந்தும்-
யாரும்
கண்டுபிடிக்க
முயலவில்லை !
"போனால் போகட்டும் போடா "
என்று
பொடுபோக்குத் தனமாக
அவரவர் வேலையை
அவரவர் பார்க்க
நாட்கள் என்னவோ
நடக்கின்றது !
இன்னும்
கண்டுபிடிக்க  முடியவில்லை !
நம்
சமுதாயச் சந்தையில்
மேய்ந்துகொண்டிருந்த
அந்த ஆட்டை இன்னும்
காணவில்லை !
யாரோ
சுயநலத்துக்காக
பிரியாணி சமைக்க
குர்பானி கொடுத்து விட்டார்களோ ?
அந்த ஆடு
ஹப்லுல்லாஹ்வால்
கட்டப்பட்டிருந்தது !
ஈமான் புல்லை
மேய்ந்து அசைபோட்டு
இஸ்லாத்தின்  தூண்களில்
கட்டப்பட்டிருந்தது !
அன்பியாக்களின்
வாரிசுகள்
மேய்ப்பர்க ளானார்கள் !
அவர்களுக்குள்ளே
சச்சரவு சண்டைகள்
சந்தைக் கூக்குரல் !
ஆடு மிரண்டு
அறுத்துக்கொண்டு
ஓடிப்போனது;
ஊர்வந்து சேரவில்லை !
ஆட்டைப் பராமரிக்க
ஊர்ஜமா அத்தும்
ஒத்துவரவில்லை !
அவர்களும்
கவுரச் சண்டையால்
கயிற்றை விட்டுவிட்டனர் !
பாவம் ! ஆடு
அநாதை ஆகி
எங்கு கிடக்கிறதோ ?
தோழர்களே ! வாருங்கள் !
அந்த ஆட்டைக் கண்டுபிடித்து
சமுதாயச் சந்தையில்
மீண்டும் மேய
விடுவோம் வாருங்கள் !
அந்த ஆட்டின் நெற்றியில்
இப்படி எழுதி
ஒட்டியிருக்கும் :
ஒற்றுமை !


 

தாயே ! தமிழ்த் தாயே !
(பீ. எம் . கமால், கடையநல்லூர்)

தாயே ! தமிழ்த் தாயே !
தாரணியில்  முதல் தாயே !
மூச்சுக்கும் பேச்சுக்கும்
முன்பிறந்த மொழித் தாயே !

ஆதிமனி தன்பேசி
ஆனந்தப் பட்டமொழி
நீதிநெறி தந்தமொழி
நீயின்றி வேறுண்டோ ?.

சொல்லுக்கு சுவையூட்டி
சொக்கவைக்கும் வகைகாட்டி
வில்லுக்கும் புல்லுக்கும்
வீர விதை தருகின்றாய் !

தேனும் தெவிட்டாத
தீங்கனி யும்கலந்து
திருநாவில் வந்தமர்ந்து
தெள்ளமுதாய் மலர்கின்றாய் !

உலகத்து மொழிகளுக்கு
ஊற்றானாய் உப்பானாய் !
எம்மொழிக்கும் முதலாக
செம்மொழியாய் நீயானாய் !

 இலக்கிய இலக்கணப்
பொன்னாடை பூண்டுநிதம்
விலக்கியே கசடுகளை
வீறுகொண்டு எழுகின்றாய் !


கற்றிட எளியமொழி
காசினியில் மூத்தமொழி !
வெற்றிட மாவதற்கு
விடுவோமா தமிழரெல்லாம் ?


நம்மை அழிப்பதற்கு
நாடுகின்ற பேர்களெல்லாம்
தம்மையே அழித்து
தலைகுனிந்து போவார்கள் !


தமிழா ! நம் தமிழ்மொழியே
தாரணியை ஆளுதற்கு
கவிழாத தலையோடு
கதவுடைத்து வெளியேவா !








 

Tuesday, 3 January 2012

KAVITHAIKAL

பள்ளிவாசல்
(பீ எம் கமால், கடையநல்லூர் )

பள்ளிவாசல்-
பக்திவிவ சாயிகளின்
பாசன பூமியிது !
தொழுவது அங்கே
உழுவது ஆகும் !
கண்ணீர் சிந்தி
தண்ணீர் பாய்ச்சி
கல்பையே விதையாய்
கருத்துடன் ஊன்றி
விவசாயத்தை
இங்கேதான்
விருத்தி செய்கிறோம் !
இம்மையில் செய்யும்
விவசாயத்திற்கு
மறுமையில்  தான்
மகசூல் கிடைக்கும் !

பொறுமையுடனே
விவசா யத்தை
பொறுப்புடன் செய்தால்
மறுமையில் அறுவடை
ஆதாயத்தை
அள்ளிக் கொள்ளலாம் !

பள்ளிவாசல்-
பரமனுக்குப் பக்தன்
எழுதுகின்ற
காதல் கடிதம்
இந்த
அஞ்சலகத்தில் தான்
முத்திரை இடப்படுகிறது !
நெற்றியில் விரலால்
தொட்டுப் பார்த்தால்
முத்திரை யின்முக
வரிகள்  தெரியும் !

இது
பள்ளிவாசல் மட்டுமல்ல !
பயிலும் பள்ளிக்
கூடமும் இதுதான் !
தலைவனுக்குத்
தலை பணிந்தொழுகும்
தத்துவம் இங்கே
போதிக்கப் படுகிறது !
ஞானம் வேண்டுமென்றால்
போதிமரம் நோக்கிப்
போகவேண்டாம்; இந்தப்
பள்ளி வாசலே
பக்தியை ஊட்டும் !
பக்தியும் புத்தியும்
இந்தப்
பட்டறையில் தான்
கூர்தீட்டப் படுகிறது !
வெறுமை மனது
ஒருமை அடைந்து
பெருமை அடைவது
இந்தப்
பள்ளிகளில் தான் !
ஆதியின் ஜோதியை
அடையாளம் காண்பதற்கு
பள்ளி      வாசல்கள்
பயன்படு கின்றன !

பள்ளிவாசல்-
மூமின்களுக்கு
ஐவேளை புகுந்து
வெளிவருகின்ற
அற்புத "ஹிரா"க் குகை !

அங்கசுத்தி எனபது
இங்கே
அகத்தூய்மை; தொழுகை
ஆன்மா குளிக்கும்
அற்புதத் தடாகம் !

குப்பா என்பது
தொப்பி யானால்

மினாராக்கள் இங்கே
அஹதென்  றுயரும்
அத்தஹயாத் விரல்கள் !

பள்ளிவாசல்-
சமத்துவம் இங்கே
சமச்சீர் கல்வி !
சகோ தரத்துவம்
சங்கமிக்கும் அருட்கடல் !

பள்ளிவாசல்-
சாத்தான் எரிந்து
சாம்பல் ஆகும்
நெருப்புக் குண்டம் !
நமக்கோ-
சுவனத்துப் பூந்தென்றல்
சுற்றிவரும் பூந்தோட்டம் !

செல்வப் பெருமை
சேரும் கர்வம்
எல்லாம்
இங்கே  நாம்
காலெடுத்து வைத்தவுடன்
காலொடிந்து போய்விடும் !

ஆன்ம  இருட்டுச்
சுவர்களுக் கிங்கே
வெளிச்ச வெள்ளை
அடிக்கப் படுகிறது !

சமுதாயப் பந்தியில்
பரிமாறப் படுவதற்கு
சகோதரத்துவ விருந்து
இங்கேதான்
சமைக்கப் படுகிறது !

தொழுகை இங்கே
தூங்கா   திருக்க
பாங்கின் ஒலிதான்
தாலாட்டா ?
பள்ளி வாசல்தான்
தொட்டிலா ?

ஆன்மக் கன்னிக்கு
ஐவேளை புத்தாடை
அணிவிக்கப் படுவது
இந்த அரங்கில்தான் !

அண்ணல் நபி காலத்தில்
அரசாங்கம் இங்கேதான்
அரங்கேற்றம் ஆனது !
இப்போதோ
அறம் பேணுமிடத்தில்
புறம் பேசப்படுகிறது !