Wednesday, 4 January 2012


சுற்றுசூழல் – (பீ. எம். கமால்)
(அதிராம் பட்டினம் கவியரங்கக் கவிதை )

ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
அகிலத்தின் சுற்றுசூழல்
அம்மணமாய்க் கிடந்தது !
அறங்கள் என்னும்
மரங்களை இழந்து
அரபகத்து பாலைவனம்
அநாதையாய்க்  கிடந்தது !
சூட்டின் கேட்டில்
சுருண்டுபோய்க் கிடந்தது
பாலை மட்டுமா ?
பாவி மனிதனின்
பண்பாடும்  கூட !
சீழ்நாறிக் கொண்டிருந்த
சிலை களிலெல்லாம்
பாவத் தூசுகள்
பரவிக் கிடந்ததால்
ஏகத்துவ வைரத்தை
உப்புகற்கள் உரசிப் பார்த்தன !
மனிதர்களுக்கு
பல தெய்வங்கள்
குலதெய்வங்கள் ஆனதால்
காற்றும்  கூடக்
கற்பழிந்திருந்தது !
சுற்றுசூழல்
மாறுபட்டிருந்ததால்
ஆன்ம வெளி யங்கே
அழுக்காகிக் கிடந்தது !
சுற்றுச் சூழலைக்
கற்றுக்கொள்ளவும்
கடவுளை மனதில்
பெற்றுக் கொள்ளவும்
கல்வி அப்போது
காணாமல் போயிருந்தது
அந்நேரத்தில்
பொன்னொளி ஒன்று
புறப்பட்டு வந்தது !
அறங்கள் என்னும்
மரங்களை நட்டு
மகிமைப் படுத்த
மன்னர் நபிகள்
மண்ணில் உதித்தார்
வள்ளல் நபியின்
வாய்மொழி அமுத
வார்த்தை மரங்கள்

நடப்பட்டதால் தானே
மனிதனின் மனச்
சுற்றுச் சூழல்
சுகாதாரம் பெற்றது !
அது-
வெறும்.
மரங்கள் மட்டுமல்ல-
மண்ணுக்கு கிடைத்த
மகத்தான வரங்கள் !
தென்னை மரங்களுக்கு
அன்னை மரமான
பேரீச்சை மரங்களும்
பேசிய காலமது !
‘ஆல’ மரங்களும்
‘அரச” மரங்களும்
பேரீச்சை மரத்திடம்
பிச்சை கேட்டன !
பெருமானாரின்
தண்ணொளி பட்டுத்
தழைத்தன அறங்கள் !
வள்ளல்   நபியின்
வருகையதனால்
பாலை மட்டுமா
பரிசுத்தம் ஆனது ?
அகிலமே அன்று
அசுத்தம் நீங்கியது !
விண்ணில் விழுந்த
ஒசான் ஓட்டையை
ஒக்கிட வந்த
ஒப்பற்ற நபிகள்
அதனால் தானோ
ஒரு விரல் நீட்டி
ஒண் மதியைப் பிளந்தார்கள் ?
சுற்றுச் சூழல் தினம்
ஜூன் ஐந்து தேதி அல்ல !
உத்தம நபிகள்
உதித்த நன்னாளே
சுத்தம் பிறந்த நாள்
சுற்றமும் மகிழ்ந்த நாள் !
சுத்தம் எனபது
ஈமானில் பாதியென்று
எந்த மதமும்
எடுத்துச் சொன்னதில்லை !
சுற்றுச் சூழலைச்
சுத்தம் செய்வதற்கு
சொன்னது நபிகள்
நாயகம் மட்டுமே
மார்க்க  மா மேதைகளே

இதோ நமது
மார்க்கச் சுற்றுசூழல்
மாசாகிக்  கொண்டிருக்கிறது !
பாலி தீன்களால் மட்டுமல்ல -
போலிதீன் களாலும்
பொலிவிழந்து கிடக்கிறது !
பெருமானாரைப்
பின்பற்றி நடந்த
அருமைததோழரை
ஆருயிர் நேசரை
சிறுமைப்படுத்தும்
கிரிமினல் சிலரால்
சத்திய வழியின்
சுற்றுச்சூழலில்
குப்பைகள் இங்கே
கொட்டப்படுகிறது !
தீன் நெறியில்
வீண் நெறியைத்
திணிக்கின்ற பேர்களை
சுத்தபடுத்துதற்கு
சோதரரே ! தயவுசெய்து
கையில் துடைப்பக்
கட்டையுடன் வாருங்கள் !
இஸ்லாத்தின் சோலைகளில்
இடுகின்ற குப்பைகளை
எடுத்து எறிவதற்கு
எல்லோரும் வாருங்கள் !

 

1 comment:

  1. ஒற்றுமைக் கயிற்றினைப் பற்றிட வாருங்கள் !

    (பி, எம். கமால், கடையநல்லூர்)



    போதும்

    இளைஞனே ! போதும் !

    பொங்கி எழுந்ததும்

    போர்க்கொடி தூக்கியதும்

    போதும் !

    ஜும் ஆவுக்கு

    வரும் கூட்டம்

    ஐவேளைத் தொழுகைக்கு

    வரவில்லையே ஏன் ?

    உன் செயல்பாட்டில் கோளாறா ?

    சிந்தித்தாயா ?

    எத்தனை பேரை நீ

    இஸ்லாத்தில் இணைத்தாய் ?

    வலிமார்கள் செயல்பாட்டை

    வழியாக்கிக் கொண்டவர்கள்

    தாமாக முன்வந்து

    தழுவினார்கள் இஸ்லாத்தை !

    உன்செயல் பாடுகளில்

    ஓராயிரம் ஓட்டைகள் !

    எதிர்வசவு ஏராளம் !

    எதிரிகளோ தாராளம் !

    வேட்டை பணத்தால்

    கோட்டையில் குத்து வெட்டு !

    அல்லாஹ்வின் பள்ளியிலே

    அறிவிக்கைப் பலகைகள் !

    இன்னார்தான் வரவேண்டும்

    என்ற கட்டுப்பாடுகள் !

    அதனால்-

    சல்லடை ஆகிவிட்ட

    ஜமா அத்துப் பிரிவுகள் !

    எப்படிப் பிறர்நம்மை

    ஏறிட்டுப் பார்ப்பார்கள் ?

    ஒற்றுமைக் கயிற்றினை

    கயிறிழுக்கும் போட்டிக்கு

    கொண்டுவந்து திடல்வெளியில்

    குவித்து வைத்தது

    யார் தோழா ?

    போதும் இளைஞனே !

    போதும் நீ இங்கு

    பொங்கி எழுந்தது போதும் !

    உண்டியல் குலுக்கி

    சண்டையிட்டதும் போதும் !

    உன்

    தெருமுனைப் பிரச்சாரம்

    மூமீன்களை உருவாக்கட்டும் !

    உன்

    நல்லொழுக்கக் காந்தம்

    பிற சமூகத்தவரை

    பிணைக்கட்டும் உன்னோடு !

    அணைக்கட்டாய் தடைக்கல்லாய்

    ஆகிவிட வேண்டாம் நீ !

    இறுதிவரை ஏக இறைக்

    கொள்கை உயிர் வாழும் !

    அந்தக்

    கொள்கையைச் சொல்லியே

    கோஷ்டி பிரிக்க வேண்டாம் !

    கலந்து வாழும் வாழ்க்கைக்கு

    கபன் துணி வாங்க வேண்டாம் !

    தொழாத பேர்களை-

    பாங்கின் பொருளுணர்த்தி

    பள்ளிக்கு அனுப்புங்கள் !

    தௌஹீது அங்கே

    தழைத்துவிடும் பாருங்கள் !

    முன்பெல்லாம்-

    கைப்பொருளை இழந்து

    மெய்ப்பொருளைக் கண்டார்கள் !

    தௌஹீது அவர்களிடம்

    தரிபட்டு இருந்தது !

    இப்போதோ-

    தௌஹீது எனபது

    விளம்பரம் மலிந்த

    வியாபாரம் ஆனது !

    பணவரவு தௌஹீதின்

    வரப்புகளிலும் பாய்ந்ததால்

    பகைமைப் பயிர் வளர்ந்து

    பாழ் பட்டுப் போகிறது !

    எல்லா ஜமா அத்தையும்

    எடுத்தெறிந்து விட்டால்

    தவ்ஹீதுக் கொள்கை

    தழைத்தோங்கி வளர்ந்து விடும் !

    சண்டையெல்லாம் மாறி

    சமாதானம் வந்துவிடும் !

    மேடைக ளெல்லாம்

    பாடைகளாகி

    பகைமை அங்கே

    பயணம் போய்விடும் !

    முன் நெடுங்காலத்தில்

    முளைத்ததில்லை ஜமா அத்து

    தௌஹீதுக் கொள்கை

    தானாக வளர்ந்தது !

    இப்போதோ-

    பணமே தௌஹீதாய்ப்

    பரிணாமம் பெற்றதினால்

    கணந்தொறும் கைகலப்பு !

    கண்ணெதிரில் அடிதடிகள் !

    கொள்கைக்கொரு பள்ளிவாசல்

    கொடிவகைகள் தோரணங்கள் !

    வெள்ளோட்டம் பார்பதற்கு

    வீதிக்கொரு ஊர்வலங்கள் !

    என்கூட்டம் பெரிதென்று

    இறுமாப்பு கூக்குரல்கள் !

    பெண்கள் நடுவீதிகளில் !

    பிள்ளைகள் இடுப்புகளில் !

    கலிமாவைச் சொல்வதற்கா

    கைகலப்புக் கலாட்டாக்கள் ?

    கல்வெட்டாய் ஆகிவிட்ட

    கலிமாவைச் சொல்லுகின்ற

    திருநாவில் தேன்மணக்கும்

    திசையெல்லாம் தீன் மணக்கும் !

    சொல்லுங்கள் கலிமாவை

    சுவனத்தில் எதிரொலிக்க !

    வெல்லுங்கள் துனியாவில்

    வீறு நடை போடுங்கள். !

    கொடிகளைத் தூக்கிக்

    குப்பையில் எறியுங்கள் !

    அடிபணிந் தெழுவது

    அல்லாஹ்வுக் கேஎன்று

    அடிமனதில் எண்ணி

    அமல்களைச் செய்யுங்கள் !

    தானைத் தலைவர்

    தாஹா நபிமட்டுமே !

    தறுதலை களுக்கெல்லாம்

    தலைவணங்கா தீர்கள் !

    நரக நெருப்புக்கு

    விறகாகி டாமல்

    சுவனத் தோட்டத்து

    மலராக வாருங்கள் !

    கொடிகளைத் தூக்கிக்

    குப்பையில் எறிந்துவிட்டு

    ஒற்றுமைக் கயிற்றினைப்

    பற்றிட வாருங்கள் !











    i

    ReplyDelete